கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை - அமெரிக்கா அறிவிப்பு


கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை - அமெரிக்கா அறிவிப்பு
x
தினத்தந்தி 13 May 2021 8:52 PM GMT (Updated: 13 May 2021 8:52 PM GMT)

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் குறைந்துள்ளது. 

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டது.

இதற்கிடையில், கொரோனா பரவலை தடுப்பதில் முக்கியமானதாக கருத்தப்படும் முகக்கவசம் அணிதல் அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்வோம் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பொது இடங்களில் முக்ககவசம் அணிய கட்டாயத்தேவையில்லை என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
     
ஆனாலும், தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, விமானங்கள், விமான நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகள் இல்லாத தங்கும் இடங்களில் தொடர்ந்து முக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 

கொரோனா தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ளாதவர்கள், இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்திக்கொள்ளாதவர்கள், ஒரு டோஸ் மட்டுமே செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தி இரண்டு வாரங்கள் நிறைவடையாதவர்கள் கட்டாயம் முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில விதிமுறைகள் உள்ள போதும் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய கட்டாயத்தேவையில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ள நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Next Story