இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்


இந்தியா-ஆஸ்திரேலியா விமான சேவைக்கான தற்காலிக தடை நீக்கம்
x
தினத்தந்தி 14 May 2021 10:05 AM GMT (Updated: 14 May 2021 10:05 AM GMT)

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை இன்றிரவு முதல் நீக்கப்படுகிறது.

கேன்பர்ரா,

இந்தியாவில் கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிரடியாக அதிகரிக்க தொடங்கின.  நாளொன்றுக்கு 1 லட்சம் என்ற அளவில் இருந்த எண்ணிக்கை, 2 லட்சம், 3 லட்சம் என அதிகரிக்க தொடங்கியது.  பின்னர் இந்த பாதிப்பு உச்சமடைந்து 4 லட்சம் அளவையும் எட்டி அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனால், தொற்றை தவிர்க்க உலக நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்தன.  இதில், ஆஸ்திரேலியா கடந்த 3ந்தேதி முதல் இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு விமானங்கள் செல்ல தற்காலிக தடை விதித்தது.

இந்நிலையில், அந்த தடை இன்றிரவு முதல் நீக்கம் செய்யப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரீசன் இன்று தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை இன்றிரவு முதல் நீக்கப்படுகிறது.  உறுதியளித்தபடி, வர்த்தக விமான சேவை மீண்டும் தொடங்கும்.

ஆஸ்திரேலிய மக்களின் பாதுகாப்பிற்காக, விமானம் புறப்படுவதற்கு முன் மேற்கொள்ளப்படும் பரிசோதனை உள்ளிட்ட கடுமையான நடைமுறைகளுடன் விமான சேவை தொடரும் என தெரிவித்து உள்ளார்.

இந்த தற்காலிக தடையானது, ஆஸ்திரேலிய சமூக மக்களுக்கு கொரோனா பாதிப்புகளுக்கான ஆபத்துகளை குறைத்ததுடன், தனிமைப்படுத்துதலுக்கான தேவையையும் குறைத்துள்ளது.  நாட்டில், 3வது அலை ஏற்படாமலும் தடுத்தது என தெரிவித்து உள்ளார்.


Next Story