துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 17 பேர் பலி


துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 17 பேர் பலி
x
தினத்தந்தி 14 May 2021 2:19 PM GMT (Updated: 14 May 2021 2:19 PM GMT)

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர்.இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது.

இந்த நிலையில் லிபியாவை சேர்ந்த அகதிகள் சிலர் அண்டை நாடான துனிசியா வழியாக இத்தாலி செல்வதற்காக படகு ஒன்றில் புறப்பட்டனர்.‌ அந்த படகில் 19 பேர் பயணம் செய்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படகு துனிசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள கடற்கரை நகரமான சார்சிஸ் அருகே சென்று இருந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் துனிசியா கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் பெண்கள் சிறுவர்கள் உள்பட 17 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 2 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

முன்னதாக கடந்த மாதம் துனிசியாவின் ஸ்பாக்ஸ் துறைமுகத்துக்கு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

 


Next Story