ஹமாஸ் போராளிகள்-இஸ்ரேல் ராணுவம் மோதல்: சமாதான முயற்சிக்காக அமெரிக்க தூதர் இஸ்ரேல் பயணம்


அமெரிக்க தூதர் ஹாடி அமர்
x
அமெரிக்க தூதர் ஹாடி அமர்
தினத்தந்தி 15 May 2021 1:41 PM GMT (Updated: 15 May 2021 1:41 PM GMT)

பாலஸ்தீனத்தின் காசா நகரைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

காசா நகர் மீது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம், போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிவதையும் தொடர்ந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது தொடர்ச்சியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டது. இதில் 10 பேர் பலியாயினர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர்.

இதன் மூலம் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இரு தரப்பு மோதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அமெரிக்க தூதர் ஹாடி அமர் இஸ்ரேலுக்கு சென்றார். அவர் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து நிலையான அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இஸ்ரேலிய, பாலஸ்தீன மற்றும் ஐ.நா. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதனிடையே ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது.


Next Story