இஸ்ரேலுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்


image courtesy: EPA
x
image courtesy: EPA
தினத்தந்தி 18 May 2021 2:52 AM GMT (Updated: 18 May 2021 2:52 AM GMT)

இஸ்ரேல் நாட்டிற்கு 5 ஆயிரத்து 381 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

வாஷிங்டன்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. 

இதற்கிடையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் சண்டையை நிறுத்துமாறு இரு தரப்பினருக்கும் அமெரிக்க உள்பட உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனாலும், இஸ்ரேலுக்கு தன்னை தற்கொள்ள உரிமை உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்களுக்கும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆயுதங்களின் இந்திய மதிப்பு 5 ஆயிரத்து 381 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும்.

ஆயுத விற்பனை தொடர்பாக மே 5-ம் தேதியே அமெரிக்க காங்கிரசுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல செய்திநாளிதழான ’வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கான தகவலை அமெரிக்க காங்கிரசிடம் ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று பல தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய சில காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Next Story