இஸ்ரேல்-காசா வன்முறை: அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு


இஸ்ரேல்-காசா வன்முறை: அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு
x
தினத்தந்தி 18 May 2021 5:24 AM GMT (Updated: 18 May 2021 5:24 AM GMT)

காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே எட்டு நாட்கள் போருக்கு பின்னர் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அழைப்பு விடுத்து உள்ளார்.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.

காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். 

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 61 குழந்தைகள் உள்பட   212 பேரும், இஸ்ரேலில் 2 குழந்தைகள் உள்பட 10 பேரும்( கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் போராளிகள் என்றும் எந்தவொரு பொதுமக்களும் உயிர் இழக்கவில்லை என இஸ்ரேல் கூறி உள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சண்டையை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே எட்டு நாட்கள் போருக்கு  பின்னர் போர்  நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அழைப்பு விடுத்து உள்ளார்.

ஹமாஸ் மற்றும் காசாவில் உள்ள மற்ற பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்"

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இணைந்து எகிப்து மற்றும் பிற நாடுகளுடன் விரோதப் போக்கை நிறுத்துவதில் செயல்பட்டு வருவதாக பிடன் கூறினார்.

பிடன் "அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க  இஸ்ரேலை கேட்டு கொண்டு உள்ளார்.

ஜனாதிபதி பிடன் போர் நிறுத்தத்திற்கு தனது ஆதரவை தெர்வித்து உள்ளார்.  மேலும் எகிப்து மற்றும் பிற நட்பு நாடுகளுடன் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து விவாதித்து உள்ளார்.

அதே சமயம் இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்களுக்கும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆயுதங்களின் இந்திய மதிப்பு 5 ஆயிரத்து 381 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Next Story