தடுப்பூசி பற்றாக்குறை: உக்ரைனில் சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடியாக பதவி நீக்கம்


Photo Credit: Reuters
x
Photo Credit: Reuters
தினத்தந்தி 19 May 2021 11:08 PM GMT (Updated: 19 May 2021 11:08 PM GMT)

தடுப்பூசி நடவடிக்கைகள் மந்தகதியில் இருப்பதாகக் கூறி அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் மேக்சிம் ஸ்டெபானோவ் பதவிநீக்கம் செய்யப்பட்டாா்.

கீவ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்நாட்டில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார்  48 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மந்த கதியாக நடப்பதாக அந்நாட்டில் விமர்சிக்கப்படுகிறது.  இதுவரை 9,48,330 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தடுப்பூசி நடவடிக்கைகள் மந்தகதியில் இருப்பதாகக் கூறி அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் மேக்சிம் ஸ்டெபானோவ் பதவிநீக்கம் செய்யப்பட்டாா். நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் அவா் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். 

சுகாதாரத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்பு பேசிய உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மைஹால், உக்ரைனில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மந்தகதியிலேயே உள்ளன. இதுவரை 23 லட்சம் தவணைகள் தடுப்பூசியே உக்ரைனுக்கு வந்துள்ளது. இதை சுகாதாரத் துறை அமைச்சரின் சிறந்த  பணியாக கருத முடியாது” என்றார். 

சுகாதாரத்துறை அமைச்சர் மேக்சிம் ஸ்டெபோனாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் முறையிட்டு இருந்தார்.  உக்ரைனின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் நடப்பு வாரத்தில் அந்நாட்டு பாராளுமன்றத்தால் தேர்வு செய்யப்படுவார் எனத்தெரிகிறது. 


Next Story