மொரோக்கோவில் இருந்து கடல்வழியாக வந்த அகதிக்கு ஆறுதல் கூறும் தன்னார்வலர் - வைரல் புகைப்படம்


மொரோக்கோவில் இருந்து கடல்வழியாக வந்த அகதிக்கு ஆறுதல் கூறும் தன்னார்வலர் - வைரல் புகைப்படம்
x
தினத்தந்தி 22 May 2021 12:26 AM GMT (Updated: 22 May 2021 12:27 AM GMT)

ஆப்ரிக்க நாடான மொரோக்கோவும் ஐரோப்பிய நாடான ஸ்பெயினும் எல்லைகளை பகிர்ந்துள்ளன.

மாட்ரிட்,

ஆப்ரிக்க நாடான மொரோக்கோவும் ஐரோப்பிய நாடான ஸ்பெயினும் எல்லைகளை பகிர்ந்துள்ளன. கடல்வழி மற்றும் நில வழியாக இரு நாடுகளும் எல்லைகளை பகிர்ந்துள்ளன. 

இதற்கிடையில், மொரோக்கோ நாட்டின் அங்கமாக உள்ள மேற்கு சஹாரா பகுதியை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று பொலிசரியோ முன்னணி என்ற அமைப்பு மொரோக்கோவில் செயல்பட்டு வருகிறது. 

இந்த அமைப்பின் தலைவராக பஹ்ரிம் ஹலி என்பவர் செயல்பட்டு வருகிறார். மேற்கு சஹாரா பகுதி தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த அங்கம் என்ற நிலைப்பாட்டில் மொரோக்கோ உறுதியாக உள்ளது. 

இந்த நிலையில் பொலிசரியோ முன்னணி அமைப்பின் தலைவர் பஹ்ரிம் ஹலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொரோக்கோவில் போதிய வசதி இல்லாததால் ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கும் படி அந்நாட்டு அரசிடம் பஹ்ரிம் ஹலி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
அந்த கோரிக்கையை ஏற்ற ஸ்பெயின் அரசு பஹ்ரிம் ஹலி தங்கள் நாட்டில் சிகிச்சை பெற கடந்த சில நாட்களுக்கு முன்ன்னர் சம்மதம் தெரிவித்தது. இதற்கு மொரோக்கோ அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால்,
கடந்த சில நாட்களாக ஸ்பெயின் - மொரோக்கோ இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்திற்கு பின்னர் கடந்த 17-ம் தேதி முதல் ஸ்பெயின் உடனான எல்லைகளை சரிவர கவனிக்காமல் மொரோக்கோ அலட்சியம் காட்டி வருகிறது. இதன் காரணமாக மொரோக்கோ மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த நபர்கள் கடல் வழியாக நீச்சல் அடித்து, நிலம் வழியாக நடந்தும் ஸ்பெயின் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.

மொரோக்கோவுடன் எல்லையை பகிரும் ஸ்பெயின் நாட்டின் சியூட்டா நகரில் கடல் மற்றும் தரை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைகின்றனர். கடலில் நீச்சல் அடித்தும், தரைவழியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை தாண்டியும் அகதிகள் ஸ்பெயின் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர்.

அவ்வாறு அத்துமீறி நுழைபவர்களை தடுக்கும் விதமாக சியோட்டா நகரின் எல்லையில் ஸ்பெயின் தனது ராணுவத்தை களமிறக்கியுள்ளது. கடல் மற்றும் நிலம் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் அகதிகள் உடனடியாக பிடிக்கப்பட்டு மீண்டும் மொரோக்கோ நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.



தற்போதுவரை ஸ்பெயின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அகதிகள் 6 ஆயிரம் பேர் மொரோக்கோ நாட்டிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மொரோக்கோவில் இருந்து கடல்வழியாக ஒரு அகதி நீச்சல் அடித்து ஸ்பெயின் எல்லைக்குள் வந்துள்ளார். கடலில் நீச்சல் அடித்து ஸ்பெயின் கரையை வந்தடைந்த அந்த அகதி உடல் வலிமையிழந்து கடற்கரையில் சுருண்டு விழந்தார். 

அப்போது, அங்கு தன்னார்வு பணிகளை மேற்கொண்டிருந்த லூனா ரியஸ் தன்னார்வல பெண்மணி கடற்கரையில் விழுந்த அந்த அகதிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். மேலும், அந்த அகதியை அணைத்து ஆறுதல் கூறினார். அப்போது, அந்த அகதியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், மொரோக்கோவில் இருந்து ஒரு அகதி தனது குழந்தையை கையில் பிடித்துக்கொண்டு கடலில் நீந்தி வருது போன்ற புகைப்படமும் வைரலாகி வருகிறது. 

பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக ஆப்ரிக்க நாடான மொரோக்கோவில் இருந்து கடல் மற்றும் நிலம் வழியாக கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான அகதிகள் சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story