தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் மாஸ்க் அணிய தேவையில்லை: தென்கொரியா


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 26 May 2021 7:24 AM GMT (Updated: 26 May 2021 7:24 AM GMT)

தென்கொரியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோல்,

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஜூலை மாதத்தில் இருந்து மாஸ்க் அணிய தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் எடுத்துக்கொண்டாலும் மாஸ்க் அணிய தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. 

தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்தகைய அறிவிப்பை தென்கொரியா வெளியிட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  அதேபோல், ஜூன் மாதத்தில் இருந்து ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்  கூட்டமாக கூட அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5.2 கோடி மக்கள் தொகை கொண்ட தென்கொரியாவில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு விட வேண்டும் என தென்கொரியா திட்டம் வகுத்துள்ளது. தற்போது அந்நாட்டில் வெறும் 7.7 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனிமைப்படுத்தலுக்கான விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் கிம் பூ கியும்  தெரிவித்துள்ளார். 

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 707- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரமாக உள்ளது. தொற்று பாதிப்பால்  1,940- பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story