மெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல் கும்பலால் மாகாண போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை


மெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல் கும்பலால் மாகாண போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 26 May 2021 11:06 AM GMT (Updated: 26 May 2021 1:08 PM GMT)

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி 200-க்கும் அதிகமான முறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகின்றன. இந்த கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், அந்நாடின் சினலோ மாகாணத்தின் தலைமை போலீஸ் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் ஜோல் எர்னிஸ்டோ டோடா. இவர் சினலோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். 

இதனால், ஜோல் எர்னிஸ்டோவை கொலை செய்ய போதைப்பொருள் கடத்தல் கும்பல் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தன. அவை தோல்வியை சந்தித்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், போலீஸ் வேலையில் இருந்து சில நாட்களுக்கு விடுமுறை எடுத்திருந்த ஜோல் எர்னிஸ்டோ நேற்று சினலோ மாகாணத்தின் மசாட்லேண்ட் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது காரை குறிவைத்து போதைப்பொருள் கடத்தல் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. 200-க்கும் அதிகமான முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஜோல் எர்னிஸ்டோ டோடா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜோல் எர்னிஸ்டோவை சுட்டுக்கொன்ற போதைப்பொருள் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story