காங்கோவில் எரிமலை வெடிப்புடன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு


காங்கோவில் எரிமலை வெடிப்புடன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு
x
தினத்தந்தி 27 May 2021 7:28 AM GMT (Updated: 27 May 2021 7:28 AM GMT)

காங்கோவில் எரிமலை வெடித்தபோது, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.

கின்ஷாசா,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் பல எரிமலைகள் உள்ளன.  இவை அவ்வப்பொழுது வெடிப்புள்ளாகி எரிமலை குழம்பை கக்கும்.  இந்த நிலையில், நையிராகோங்கோ என்ற எரிமலை கடந்த சனிக்கிழமை வெடிப்புக்குள்ளானது.

இதில் இருந்து சாம்பல் புகை வான்வரை எழுந்தது. எரிமலை வெடித்து சிதறியதில் உள்ளிருந்து வெளியேறிய எரிமலை குழம்பு நகர் முழுவதும் பரவியதில் சில கிராமங்கள் அழிந்தன.  இதனை முன்னிட்டு விமான நிலையம் ஒன்றும் மூடப்பட்டது.

எரிமலை குழம்பு சில கி.மீ. தொலைவுக்கு சாலையில் பரவி மக்களுக்கு உணவு எடுத்து செல்லும் முக்கிய பாதை தடைப்பட்டது.  இதனால், 5 லட்சம் பேருக்கு நீர் மற்றும் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சில கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன.  எரிமலை வெடிப்புக்கு இதுவரை 31 பேர் பலியாகி உள்ளனர்.  பெரியவர்களில் 40 பேர் மற்றும் 170 குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருக்க கூடும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.

பொதுமக்கள் தப்பியோடியதில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளனர்.  20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

காங்கோவில் எரிமலை வெடித்தபோது, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.  ரிக்டரில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ருபாவு மாவட்டத்தின் லேக் கிவு என்ற பகுதியில் ஏற்பட்டு உள்ளது என ருவாண்டா நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட துயரத்தில் சிக்கி, குடிநீர், மின்சார வினியோகம் ஆகியவை இல்லாமல் வீடுகளையும் இழந்து மக்கள் தவித்து வரும் சூழலில் கட்டிடங்கள் சேதமடைந்து அவர்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.  கடந்த 2002ம் ஆண்டு காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கே ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி 250 பேர் பலியானார்கள்.


Next Story