பிரேசில் அதிபர் போல்சனரோ பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்


பிரேசில் அதிபர் போல்சனரோ பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2021 12:06 AM GMT (Updated: 30 May 2021 12:06 AM GMT)

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரேசிலியா,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது. அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் சுமார் 4,59,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததே இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோ, ஆரம்பத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவலை கையாளும் விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தது. பொது வெளியில் முக கவசம் அணியத் தேவையில்லை என்று கூறிய அவர், தானும் முக கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் கொரோனா தடுப்பூசி, ஊரடங்கு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில், போல்சனரோ மெத்தனப் போக்கை கடைப்பிடித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போல்சனரோ தலைமையிலான அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க செனட் சபை முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் அதிபர் போல்சனரோ பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பிரேசில் தலைநகர் பிரேசிலியா, சால்வேடார், பெலோ ஹாரிசாண்டே உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போல்சனரோவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடது சாரிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story