மியான்மரில் விலைவாசி உயர்வு: வங்கிகளுக்கு படையெடுக்கும் மக்கள்


மியான்மரில் விலைவாசி உயர்வு:  வங்கிகளுக்கு படையெடுக்கும் மக்கள்
x
தினத்தந்தி 30 May 2021 4:02 AM GMT (Updated: 30 May 2021 4:02 AM GMT)

மியான்மரில் ராணுவ ஆட்சியில் விலைவாசி உயர்வால் மக்கள் வங்கிகளில் பணம் எடுக்க காலையிலேயே வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

நைபிடாவ்,

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி 1ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அமெரிக்கா, மியான்மர் ராணுவத்துக்கு வன்மையான கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.  அவர்களை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.  தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.  மியான்மரில் ராணுவ ஆட்சியில் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.  பொதுமக்களிடம் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  கையிருப்பும் குறைவாக உள்ளது.

இதனால், வருங்கால தேவைக்காக வங்கியில் உள்ள தங்களுடைய சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை எடுக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டனர்.

இதுதவிர உள்ளூர் கரன்சி நோட்டின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து உள்ளது.  ராணுவமும் சரியான நேரத்தில் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.  இதனால், சிலர் கொள்ளையடிக்கும் நிலைக்கு சென்றுள்ளனர்.

ராணுவ ஆட்சியின் தொடக்கத்தில், வங்கி ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  பின்னர் மெல்ல ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கினர்.  ஆனால், மக்கள் வங்கிகளில் குவிந்து விடாமல் தடுக்க, பணம் எடுப்பதில் ராணுவம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால், ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே வங்கி வாசலில் மக்கள் வந்து வரிசையில் நின்று விடுகின்றனர்.  பணம் எடுக்க முடிந்தவர்கள் உடனடியாக அதனை கருப்பு சந்தையில் கொடுத்து அமெரிக்க டாலராக மாற்றி விடுகின்றனர்.  அல்லது தங்களது பாய், விரிப்புகளின் கீழ் மறைத்து வைத்து விடும் சூழல் காணப்படுகிறது.




Next Story