அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி ரூ.376 கோடி மோசடி செய்த இந்தியருக்கு 20 ஆண்டு சிறை


அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி ரூ.376 கோடி மோசடி செய்த இந்தியருக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 30 May 2021 8:16 PM GMT (Updated: 30 May 2021 8:16 PM GMT)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிவிக்ரம் ரெட்டி.

39 வயதான இவர் அமெரிக்காவில் 3 ஆஸ்பத்திரிகள் நடத்தி வந்தார். இந்தநிலையில் ரெட்டி தனது ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக போலியான ஆவணங்களை தயார் செய்து அதன்மூலம் மருத்துவ மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தார்.கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெட்டி தனது ஆஸ்பத்திரிகள் மூலம் சுகாதார மோசடியில் ஈடுபட்டு வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து ரகசியமாக விசாரணை நடத்தியதில் ரெட்டி காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி 52 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.376 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரம்) மோசடி செய்தது அம்பலமானது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.‌ அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் இந்த வழக்கில் ரெட்டியின் தண்டனை விவரம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரெட்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி அவர் மோசடி செய்த 52 மில்லியன் டாலரை காப்பீட்டு நிறுவனங்களுக்கு திரும்ப வழங்கவும் உத்தரவிட்டார்.

Next Story