உலக செய்திகள்

ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்தி அமீரகத்தில் செயற்கை மின்னூட்டத்தின் மூலம் மழை பெறும் திட்டம் அறிமுகம் + "||" + Introduction of a project to receive rain by artificial electrification in the UAE using drones; Official Information

ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்தி அமீரகத்தில் செயற்கை மின்னூட்டத்தின் மூலம் மழை பெறும் திட்டம் அறிமுகம்

ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்தி அமீரகத்தில் செயற்கை மின்னூட்டத்தின் மூலம்  மழை பெறும் திட்டம் அறிமுகம்
அமீரகத்தில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் செயற்கை மின்னூட்டத்தை மேகமூட்டத்தில் செலுத்தி மழை பெய்ய வைக்கும் தொழில்நுட்ப திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து அந்த திட்டத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் கெரி நிக்கோல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செயற்கை மழை

அமீரகத்தில் சாதாரணமாக விமானத்தை பயன்படுத்தி கிளவுட் சீடிங் முறையில் செயற்கை மழையானது பெறப்பட்டு வருகிறது. இதற்கு பெரிய விமானங்கள் மற்றும் விமானிகள் தேவைப்படுவர். இதில் பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு, சில்வர் அயோடைடு போன்ற ரசாயன உப்புகள் அடங்கிய கலவை வானில் எடுத்து செல்லப்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள மேகங்களில் எரித்து புகையாக வெளியிடப்படுகிறது.

அப்போது அந்த புகையில் கலந்துள்ள உப்புகள் மேகத்தை குளிரவைத்து மழையாக பெய்ய வைக்கப்படுகிறது. இந்த திட்டமானது அமீரகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் 30 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு பெறப்பட்டு வருகிறது.

புதிய திட்டம் அறிமுகம்

தற்போது இந்த முறைக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பமான மின்னூட்டத்தின் மூலம் செயற்கை மழை பெற அமீரகத்தில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக அமீரக ஜனாதிபதி விவகாரத்துறை 1½ கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது.

இதில் இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பில், அமீரக தேசிய வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு இந்த திட்டமானது செய்து கொடுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ‘கட்டிங் எட்ஜ்’ தொழில்நுட்பத்தில் அமைந்த மின்சாரத்தால் இயங்கும் ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆளில்லா குட்டி விமானங்கள்

இது வானில் பறந்து சென்று மின்னூட்டத்தை மேகங்களுக்குள் வெளியிடும். இதில் அந்த மேகத்தில் உள்ள நீர்த்திவளைகளில் மின் அயனிகள் படிந்து சிறு அதிர்வுகளை ஏற்படுத்தும்போது குளிர்ந்து மழையாக பெய்கிறது. இங்கிலாந்து நாட்டில் இந்த முறையின் மூலம் கூடுதல் மழைப்பொழிவு பெறப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த மார்ச் மாதம் அமீரகத்தில் உள்ள பாலைவன பகுதியில் இந்த தொழில்நுட்பமானது ஆளில்லா குட்டி விமானத்தை வைத்து சோதனை செய்யப்பட்டது. இந்த முறையில் ரசாயன உப்புகள், பெரிய விமானங்கள் பயன்படுத்துவது ஆகியவை தேவையில்லை என்பதால் செலவீனம் மிகக்குறைவாகவே இருக்கும். அமீரகத்தில் செயல்படுத்தப்பட உள்ள செயற்கை மின்னூட்டத்தின் மூலம் மழை பெறும் திட்டத்திற்காக தற்போது ஆளில்லா குட்டி விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.