ரஷ்யா 8 நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க முடிவு


ரஷ்யா 8 நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க முடிவு
x
தினத்தந்தி 1 Jun 2021 2:37 AM GMT (Updated: 1 Jun 2021 2:37 AM GMT)

ஆஸ்திரியா உள்பட 8 நாடுகளுடன் வரும் 10ந்தேதி முதல் குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்தன.  இதில் ரஷ்யாவும் ஒன்று.

இந்த நிலையில், ரஷ்ய அரசு வரும் 10ந்தேதி முதல் ஆஸ்திரியா, ஹங்கேரி, லெபனான், லக்சம்பர்க், மொரீசியஸ், மொராக்கோ, குரோசியா மற்றும் அல்பேனியா ஆகிய 8 நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை குறிப்பிட்ட அளவில் மீண்டும் இயக்குவது என முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஆஸ்திரியாவின் வியன்னா-மாஸ்கோ செல்லும் விமானம், ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்-மாஸ்கோ செல்லும் விமானம், மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ்-மாஸ்கோ செல்லும் விமானம், மொராக்கோ நாட்டின் ரபாத்-மாஸ்கோ செல்லும் விமானம், குரோசியா நாட்டின் ஜக்ரெப்-மாஸ்கோ செல்லும் விமானம் ஆகியவை வாரம் இரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.

இதேபோன்று, லெபனான் நாட்டின் பெய்ரூட்-மாஸ்கோ செல்லும் விமானம், லக்சம்பர்க் நாட்டின் லக்சம்பர்க்-மாஸ்கோ செல்லும் விமானம் ஆகியவை வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.  அல்பேனியா நாட்டின் திரானா-மாஸ்கோ செல்லும் சார்ட்டர்டு விமானங்களும் வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.


Next Story