ஜப்பானில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவு


ஜப்பானில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவு
x
தினத்தந்தி 1 Jun 2021 3:21 AM GMT (Updated: 1 Jun 2021 3:21 AM GMT)

ஜப்பான் நாட்டில் வரும் 21ந்தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவாகியுள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் இதுவரை 7.45 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  அவர்களில் 6.72 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  மொத்தம் 12,926 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை அந்நாடு தீவிரப்படுத்தி உள்ளது.  ஜப்பானில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கு பைசர் தடுப்பூசி போடவும் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போடும் பணியை பரவலாக நடைமுறைப்படுத்தும் முயற்சியாக வரும் 21ந்தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகளை போடுவது என முடிவாகியுள்ளது.

இதுபற்றி ஜப்பான் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கட்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்கவும், பரவலை கட்டுப்படுத்தவும் தடுப்பூசிகள் போடும் பணியை துரிதப்படுத்த அரசு தீவிர முனைப்புடன் உள்ளது.

அதனால், வருகிற 21ந்தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதற்காக அந்த பகுதிகளில், மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.


Next Story