உருமாறிய கொரோனாவால் இங்கிலாந்தில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு


உருமாறிய கொரோனாவால் இங்கிலாந்தில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 2 Jun 2021 5:12 AM GMT (Updated: 2 Jun 2021 5:12 AM GMT)

இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர, அந்நாட்டு மக்கள் மேலும் சில காலம் காத்திருக்க வேண்டி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்பட்டால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 21 ஆம் தேதியோடு நிறைவுக்கு வரும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து மக்களிடையே பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவது கண்டறியப்பட்டது. இதற்கிடையில் ஊரடங்கில் தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்போது வெயில் காலம் என்பதால் மக்கள் கடற்கரைகளிலும், பூங்காக்களிலும் அதிக அளவில் கூடி வருகின்றனர். 

இத்தகைய காரணங்களால் ஊரடங்கின் கடைசி கட்ட தளர்வுகளை கொண்டு வருவதற்கு மேலும் ஒரு மாதம் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் எந்த அளவு உள்ளது என்பதை ஆய்வு செய்யவும் இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. 

எனவே கொரோனா அலை முற்றிலும் ஓய்வதற்கு முன்பாக ஊரடங்கை முழுவதுமாக தளர்த்தினால், இதுவரை மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் விணாகி விடக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர மேலும் சில காலம் காத்திருக்க வேண்டிய சூழல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story