அமெரிக்காவில் ருசிகரம் செல்லப்பிராணிகளை காப்பாற்ற கரடியை கையாலேயே அடித்து விரட்டிய வீரமங்கை


அமெரிக்காவில் ருசிகரம் செல்லப்பிராணிகளை காப்பாற்ற கரடியை கையாலேயே அடித்து விரட்டிய வீரமங்கை
x
தினத்தந்தி 3 Jun 2021 12:02 AM GMT (Updated: 3 Jun 2021 12:02 AM GMT)

அமெரிக்காவில் செல்லப்பிராணிகளை காப்பாற்ற கரடியை கையாலேயே அடித்து விரட்டிய வீரமங்கையின் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்காவின் உட்டா மாகாணம் வயோமிங் நகரை சேர்ந்த சிட்லாலி மோரினிகோ என்கிற பெண் அங்குள்ள எல்லோஸ்டன் தேசிய பூங்கா அருகே வீட்டை கட்டி வசித்து வருகிறார்.இந்தநிலையில் அண்மையில் இந்த பூங்காவில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று தனது குட்டிகளுடன் சிட்லாலி மோரினிகோ‌ வீட்டின் பின்புறத்தில் உள்ள சுற்று சுவரில் ஏறியது.அப்போது சிட்லாலி மோரினிகோவின் 17 வயது மகளான ஹேலி மோரினிகோ செல்லப்பிராணிகளாக வளர்த்து வரும் 3 நாய்கள் கரடியை விரட்ட முயன்றன. இதனால் கரடி குட்டிகள் பயந்து ஓட, தாய் கரடி நாய்களை தாக்க முயன்றது. இதனிடையே நாய்களின் சத்தம் கேட்டு ஹேலி மோரினிகோ வீட்டின் பின்புறம் வந்தார். அப்போது கரடி தனது செல்லப்பிராணிகளை தாக்க முயல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சற்றும் யோசிக்காமல் ஓடிச் சென்று கையாலேயே கரடியை ஓங்கி அடித்து சுற்று சுவரிலிருந்து தள்ளிவிட்டார். இதனால் அதிர்ந்து போன கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ஹேலி மோரினிகோ கூறுகையில் ‘‘உண்மையில் அதை நான் அடித்து சுவரில் இருந்து தள்ளி விடும் வரை அது கரடி என்பதே எனக்கு தெரியாது. ஏதோ ஒரு மிருகம் என் குழந்தைகளை (நாய்கள்) தூக்கி செல்ல போகிறது என்ற பதற்றத்தில் அதை அடித்து தள்ளிவிட்டேன்’’ என கூறினார்.

Next Story