பொருளாதார மீட்புக்கான திட்டங்கள் பற்றி சீன துணை பிரதமருடன் அமெரிக்க மந்திரி திடீர் பேச்சு


பொருளாதார மீட்புக்கான திட்டங்கள் பற்றி சீன துணை பிரதமருடன் அமெரிக்க மந்திரி திடீர் பேச்சு
x
தினத்தந்தி 3 Jun 2021 2:55 PM GMT (Updated: 3 Jun 2021 2:55 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று பரவல் விவகாரத்தில் அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதி டிரம்புக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது.

ஆனால் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபின்னர் நிலைமையில் லேசான மாற்றம் தென்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தியதுடன், இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடரவும் ஒப்புக்கொண்டன. இந்த நிலையில் அமெரிக்க கருவூல மந்திரி ஜேனட் யெல்லன், சீன துணைப்பிரதமர் லியு ஹீயுடன் காணொலிக்காட்சி வழியாக நேற்று முன்தினம் திடீர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையின் போது, தொடர்ச்சியான வலுவான பொருளாதார மீட்புக்கு ஆதரவு அளிக்கும் ஜோ பைடன்- கமலா ஹாரிஸ் நிர்வாகத்தின் திட்டங்கள் குறித்தும், அமெரிக்க நலன்களைக் கொண்ட பகுதிகளுக்கு ஒத்துழைப்பதின் முக்கியத்துவம் பற்றியும் ஜேனட் யெல்லன் பேசினார். அதே நேரத்தில் பிரச்சினைக்குரிய விஷயங்களை வெளிப்படையாக கையாள்வது பற்றியும் அவர் சீன துணைப்பிரதமர் லியு ஹீயுடன் விவாதித்தார்.இந்த பேச்சு வார்த்தை குறித்து அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில், “ ஜேனட் யெல்லன், துணைப்பிரதமர் லியுடனான எதிர்கால பேச்சு வார்த்தைகளை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டார்” எனகூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே குடியரசு கட்சி எம்.பி.க்கள் 200 பேர், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசிக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை ஏற்படுத்தியதற்கு சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சியை பொறுப்பேற்க வைக்க வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story