இலங்கை: ரசாயன பொருட்களை ஏற்றிவந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது - சுற்றுச்சூழலுக்கு ஆபத்து


Image courtesy : AFP
x
Image courtesy : AFP
தினத்தந்தி 3 Jun 2021 8:18 PM GMT (Updated: 4 Jun 2021 12:25 AM GMT)

இலங்கையில் ரசாயன பொருட்களை ஏற்றிவந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

கொழும்பு,

இந்தியாவில் இருந்து 1,486 கண்டெய்னர்களில் நைட்ரிக் ஆசிட் உள்பட வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான எம்வி எஸ்பிரஸ் என்ற சரக்கு கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது.

இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கான அனுமதிக்காக அந்த சரக்கு கப்பல் துறைமுகத்தில் இருந்து 9.5 நாட்டிக்கல் மையில் தொலைவில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கப்பலில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் பயணம் செய்தனர். 

இதற்கிடையில், வேதிப்பொருட்கள் நிரப்பப்பட்டிருந்த அந்த சரக்கு கப்பலில் உள்ள கண்டெய்னரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை கடற்படை கப்பல்கள் தீவிபத்து ஏற்பட்ட கப்பல் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றன. 

கப்பலில் சிக்கி இருந்த 25 மாலுமிகளையும் பத்திரமாக மீண்டனர். மேலும், அந்த சரக்கு கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். வேதிப்பொருட்களை கொண்டுவந்த கப்பல் என்பதால் தீ வேகவேகமாக பரவியது. இந்த தீயை அணைக்க இந்திய கடற்படையின் உதவியும் பெறப்பட்டது.

13 நாட்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கப்பலில் எரிந்த தீ முழுவதும் அணைக்கப்பட்டது. ஆனால், கப்பல் முழுவதும் எரிந்து நாசமானதால் கப்பலின் பாகங்கள் கடலில் மூழ்கத்தொடங்கியது. கப்பலில் 350 டன் எண்ணெய் இருந்துள்ளது. மேலும், ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக் பொருகள் இருந்துள்ளது.

இந்நிலையில், ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக், எண்ணைய் ஆகியவை கடலில் மூழ்கியதால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கடல் நீர் முழுவதும் எண்ணெய் படலமாக காட்சியளிக்கிறது. இதனால், கடலில் வாழும் மீன் உள்ளிட்ட உயிரிழனங்களுக்கும், கடல் வளங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Next Story