12 ஆண்டுகால நேட்டன்யாஹூ ஆட்சிக்கு முடிவு இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்கின்றன - நப்தாலி பென்னட் பிரதமர் ஆகிறார்


12 ஆண்டுகால நேட்டன்யாஹூ ஆட்சிக்கு முடிவு இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்கின்றன - நப்தாலி பென்னட் பிரதமர் ஆகிறார்
x
தினத்தந்தி 3 Jun 2021 10:56 PM GMT (Updated: 3 Jun 2021 10:56 PM GMT)

இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டு கால பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நப்தாலி பென்னட் பிரதமர் ஆகிறார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டில் 2009-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி பெஞ்சமின் நேட்டன்யாஹூ பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுயிட் கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலைமை நீடித்தது.

இந்த நிலையில் அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து ஆட்சி அமைக்க நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில் யேஷ் அதிட் (17இடங்கள்), காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்) ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன. இந்த கட்சிகள் பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு இடம் (மொத்தம் 62 இடங்கள்) பெற்று விட்டன. இதனால் அரசு அமைப்பதில் சிக்கல் எழாது.

இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும்.

முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் (வயது 49) பிரதமர் பதவி ஏற்பார். அவருக்கு பின்னர் யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் பிரதமர் பதவிக்கு வருவார்.

புதிய பிரதமர் பதவி ஏற்பதற்கு முன்னர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும். பெரும்பான்மை பலம் இருப்பதால் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி கிடைத்து விடும் என்று நம்பப்படுகிறது.

யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “ எதிர்க்கட்சிகள் கூட்டாக அரசு அமைப்பது குறித்து ஜனாதிபதி ருவன் ரிவ்லினிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்ற சபாநாயகர் யாரிவ் ரெலவினிடமும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இஸ்ரேலின் அனைத்து குடிமக்கள் நலனுக்காகவும் எங்கள் அரசாங்கம் செயல்படும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த அரசு எதிரிகளை மதிக்கும். இஸ்ரேல் சமூகத்தின் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைக்க முழு சக்தியையும் பயன்படுத்துவோம்” என கூறப்பட்டுள்ளது.

லாப்பிட்டுக்கு ஜனாதிபதி தி ருவன் ரிவ்லின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ புதிய அரசு அமைப்பதற்கான உங்கள் உடன்பாட்டுக்காக உங்களுக்கும், கட்சிகளின் தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள். புதிய அரசை அங்கீகரிப்பதற்கு விரைவில் நாடாளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

அரபு இஸ்லாமிய ராம் கட்சித்தலைவர் மன்சூர் அப்பாஸ் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த முடிவு கடினமானதுதான். பல பிரச்சினைகள் இருந்தன. ஆனால் ஒப்பந்தங்களை எட்டுவது முக்கியம். அரபு சமூகத்தின் நலனுக்காக இந்த ஒப்பந்தத்தில் பல விஷயங்கள் உள்ளன” என குறிப்பிட்டார்.

இஸ்ரேலில் நப்தாலி பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்பதால், 12 ஆண்டு கால பெஞ்சமின் நேட்டன் யாஹூ ஆட்சி முடிவுக்கு வருகிறது.

Next Story