நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிப்பு; அதிபரின் பதிவை நீக்கியதால் நடவடிக்கை


நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிப்பு; அதிபரின் பதிவை நீக்கியதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2021 2:49 PM GMT (Updated: 6 Jun 2021 2:49 PM GMT)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது.

இதில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் தற்போதும் கூட பல்வேறு ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன.இந்த நிலையில் நைஜீரிய அதிபர் முகமது புகாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசை எதிர்ப்பவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பதில் அளிக்கப்படும்” என கூறியிருந்தார்.

இது வன்முறையை தூண்டும் வகையிலும், தங்களின் விதிமுறைகளுக்கு எதிராகவும் இருப்பதாக கூறி அதிபர் முகமது புகாரியின் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து நைஜீரியாவில் டுவிட்டருக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.

மேலும் தடையை மீறி குறுக்கு வழியில் ரகசியமான முறையில் டுவிட்டரை பயன்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜீரிய அரசு எச்சரித்துள்ளது. இதனிடையே டுவிட்டருக்கு தடை விதிப்பது மூலம் மக்களின் பேச்சுரிமையை பறிப்பதாக கூறி நைஜீரிய அரசுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 


Next Story