பாகிஸ்தானில் ரெயில்கள் மோதி விபத்து: பலியானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்வு


பாகிஸ்தானில் ரெயில்கள் மோதி விபத்து:  பலியானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 Jun 2021 9:02 PM GMT (Updated: 8 Jun 2021 9:02 PM GMT)

பாகிஸ்தானில் ரெயில்கள் மோதி கொண்ட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட்டு சென்றது.  அதேவேளையில் ராவல்பிண்டி நகரில் இருந்து கராச்சி நோக்கி சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்திலுள்ள தார்க்கி என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் சற்றும் எதிர்பாராத வகையில் தடம் புரண்டது. அந்த சமயத்தில் அருகிலுள்ள மற்றொரு தண்டவாளத்தில் எதிர் திசையில் சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது தடம் புரண்ட மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் பாய்ந்து சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் மோதின. அதனை தொடர்ந்து சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன.  அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் இறங்கினர். உள்ளூர் மக்களும் அவர்களுடன் கைகோர்த்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த கோர விபத்தில் 50 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக முதல்கட்டமாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ரெயில் விபத்தில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.  ரெயில் விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.  இந்த விபத்தில் என்ஜினுக்கு அடியில் சிக்கி கொண்ட பெட்டியில் இருந்து மீட்பு பணியினர் உடல்களை மீட்டு உள்ளனர்.  விபத்தில் பலியானவர்களில் நேற்று (செவ்வாய் கிழமை) மீட்கப்பட்டவர்களில் 12 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றவர்கள் என கூறப்படுகிறது.

ரெயில் விபத்தில் மில்லட் எக்ஸ்பிரசின் 12 பெட்டிகளும் மற்றும் சையது எக்ஸ்பிரசின் என்ஜின் மற்றும் 4 பெட்டிகளும் தடம் புரண்டுள்ளன என அந்நாட்டு பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.


Next Story