நவால்னியால் தொடங்கப்பட்ட ஊழலுக்கு எதிரான அமைப்பு பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பு - ரஷிய கோர்ட்டு அதிரடி


Image courtesy : AFP
x
Image courtesy : AFP
தினத்தந்தி 10 Jun 2021 6:38 AM GMT (Updated: 10 Jun 2021 6:38 AM GMT)

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரால் தொடங்கப்பட்ட ஊழலுக்கு எதிரான அமைப்பை கோர்ட்டு பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்சி நவால்னி(44). ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக 'ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி அலெக்சி நவால்னி பல ஆண்டுகளாக போராடி வந்தார். ஆனால், அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானார். 

இதில் கோமா நிலைக்கு சென்ற நவால்னி ரஷியாவில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் குணமடைந்த நவால்னி கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி மீண்டும் ரஷியா வந்தார். 

மாஸ்கோ விமானநிலையம் வந்து இறங்கிய நவால்னியை ரஷிய போலீசார் கைது செய்தனர். 2014-ம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் நவால்னி கைது செய்யப்பட்டதாக ரஷிய போலீசார் தெரிவித்தனர். 

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நவால்னிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நவால்னி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின்னர் நவால்னி கடந்த 7-ம் தேதி மீண்டும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், அலெக்சி நவால்னி தொடங்கிய 'ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு’ மற்றும் ரஷியா முழுவதும் உள்ள அவரது அமைப்பின் அலுவலகங்களில் பயங்கரவாத செயல்கள் நடைபெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த ரஷிய கோர்ட்டு, அலெக்சி நாவல்னியின் ‘ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு’ மற்றும் அவரது அமைப்பின் அலுவலகங்களை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. 

இந்த அமைப்புகள் அரசு ஊழியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுவது மட்டுமல்லாமல் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடுகிறது என கோர்ட்டு தெரிவித்துள்ளது. 

அலெக்சி நாவல்னியின் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததன் மூலம் அதில் செயல்பட்டு வரும் ஆர்வலர்கள் மற்றும் இந்த அமைப்பிற்கு நிதி உதவி வழங்குபவர்கள், அமைப்பின் தகவல்களை பகிர்பவர்கள் அனைவரும் சட்டரீதியினான வழக்குகளையும், நீண்டகால சிறைதண்டனையை சந்திக்க நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story