சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு அர்ஜெண்டினா அரசு அவசர கால அனுமதி


சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு அர்ஜெண்டினா அரசு அவசர கால அனுமதி
x
தினத்தந்தி 12 Jun 2021 4:23 AM GMT (Updated: 12 Jun 2021 4:23 AM GMT)

அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு அர்ஜெண்டினா அரசு ஓப்புதல் அளித்துள்ளது.

புயனோஸ் ஐரெஸ்,

கொரோனா பரவலின் 2வது அலையால் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினா, அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா, பிரேசிலுக்கு அடுத்ததாக அர்ஜெண்டினாவில் தினமும் அதிக அளவிலான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதுவரை அங்கு மொத்தம் 41 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 85 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அர்ஜெண்டினாவில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, ஆஸ்ட்ரா செனகா, சைனோபார்ம் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. சுமார் 4.5 கோடி மக்கள் தொகையை கொண்ட அர்ஜெண்டினாவில், தற்போது வரை 1.2 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 32 லட்சம் பேருக்கு 2 டோஸ்கள் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு அர்ஜெண்டினா அரசு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. சீனாவின் கான்சினோ தடுப்பூசி ஒரே டோஸ் தடுப்பூசி ஆகும். முதற்கட்டமாக 54 லட்சம் கான்சினோ தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி இருப்பதாக அர்ஜெண்டினா சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Next Story