ஹஜ் புனித பயணத்துக்கு 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Jun 2021 1:53 AM GMT (Updated: 13 Jun 2021 1:53 AM GMT)

இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணத்துக்கு 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

துபாய், 

முஸ்லிம்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்குகிறது. இந்த புனித பயணத்துக்கான அறிவிப்பை சவுதி அரேபிய அரசு நேற்று வெளியிட்டது.

அதன்படி இந்த ஆண்டு, சவுதி அரேபியாவை சேர்ந்த 60 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டும் கொரோனாவின் முதல் அலை காரணமாக ஹஜ் புனித பயணம் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஏற்கனவே சவுதி அரேபியாவில் வசித்து வந்த வெளிநாட்டினர் 1000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story