துபாயில் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதார ஆணைய அதிகாரி தகவல்


துபாயில் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதார ஆணைய அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2021 2:46 PM GMT (Updated: 14 Jun 2021 2:46 PM GMT)

துபாயில் இதுவரை 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதார ஆணையத்தின் துணை பொது இயக்குனர் டாக்டர் அலவி அல் ஷேக் அலி கூறினார்.

துபாய்,

துபாயில் இதுவரை 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதார ஆணையத்தின் துணை பொது இயக்குனர் டாக்டர் அலவி அல் ஷேக் அலி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

20 சதவீதம் பேர் போடவில்லை

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது.

அதன்படி, துபாய் நகரில் உள்ள பல்வேறு மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதன் மூலம் துபாய் நகரில் மட்டும் இதுவரை 23 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிகளை போட்டுள்ளனர். இதில் 83 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோசை மட்டும் போட்டுள்ளனர். 64 சதவீதம் பேர் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போடுவது குறித்து தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா பாதித்தவர்கள் உள்ளிட்ட 20 சதவீதம் பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10-ல் 8 பேர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

விழிப்புணர்வு

இதுமட்டுமல்லாமல் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிலரும் தடுப்பூசி போடவில்லை. மருத்துவர்களின் பரிந்துரைக்கு பின்னர் அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வர்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வானது முகம்மது பின் ராஷித் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், துபாய் தகவல் கார்ப்பரேசன் ஆகியவற்றுடன் இணைந்து நடக்கிறது.

அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனர் என்ற இலக்கை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி போடாத மற்றவர்களை ஆர்வமூட்டுவதன் மூலம் இந்த பணியை வெற்றிகரமாக முடிக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story