அணு ஆயுத குவிப்பில் ரஷியா முதலிடம்


அணு ஆயுத குவிப்பில் ரஷியா முதலிடம்
x

அணு ஆயுத குவிப்பில் ரஷியா முதலிடம் வகிக்கிறது. அந்த நாடு வசம் 6,375 அணு ஆயுதங்கள் உள்ளன என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளன.

சுவீடன் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.) பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு பற்றி விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து, அதை ‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2021’ என்ற தலைப்பில் வெளியிட்டு, உலக அரங்கை அலற வைத்திருக்கிறது. அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* உலகின் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அவை அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகும்.

* உலகளவில் குவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 80 ஆகும். இவற்றில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா வசமே உள்ளன.

சீனா, இந்தியா, பாகிஸ்தான்

* கடந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி சீனாவிடம் 320, பாகிஸ்தானிடம் 160, இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் இருந்தன.

* சீனாவைப் பொறுத்தமட்டில் அது அணு ஆயுதங்களின் குறிப்பிடத்தக்க நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள குவிப்பின் நடுவில் உள்ளது.

* இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத இருப்பை விஸ்தரித்து வருவதாக தெரிகிறது.

ரஷியா முதல் இடம்

* ரஷியாவிடம்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 6,375 அணு ஆயுதங்கள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் அமெரிக்கா (5,800) உள்ளது. இங்கிலாந்திடம் 225, பிரான்சிடம் 290, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 40-50 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.

* சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது பிரிக்கப்பட்ட புளூட்டோனியம் ஆகியவற்றையே தங்கள் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்துகின்றன.

* இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் ஏவுகணை சோதனைகள் பற்றி அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஆனால் அவற்றில் நிலை அல்லது அணு ஆயுதங்களின் அளவு பற்றி எந்த தகவலையும் அளிப்பதில்லை.

* உலகமெங்கும் உள்ள 13 ஆயிரத்து 80 அணு ஆயுதங்களில் 2,000 அணுகுண்டுகள், அதிக செயல்பாட்டு எச்சரிக்கையுடன் இருக்கின்றன.

ஆயுத இறக்குமதி நாடுகள்

* சவூதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகள் 2016-20 ஆண்டுகள் இடையே அதிகளவிலான ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளன.

* சவூதி அரேபியா உலகளவிலான ஆயுத இறக்குமதியில் 11 சதவீதத்தையும், இந்தியா 9.5 சதவீதத்தையும் இந்த கால கட்டத்தில் செய்துள்ளன.

இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.

இந்த புத்தகத்தில் வெளியாகி உள்ள அணு ஆயுதங்கள் இருப்பு, ஆயுத இறக்குமதி, அணு ஆயுதங்களுக்கு கச்சாப்பொருளாக பயன்படுத்தப்படக்கூடிய பொருட்கள் பற்றிய தகவல்கள் உலக அரங்கை அதிர வைத்துள்ளன.

Next Story