அமெரிக்கா: ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து


Image courtesy : abc
x
Image courtesy : abc
தினத்தந்தி 16 Jun 2021 8:33 AM GMT (Updated: 16 Jun 2021 8:33 AM GMT)

அமெரிக்காவில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சிகாகோ மாகாணம் ராக்டன் நகரில் மிகப்பெரிய ரசாயான தொழிற்சாலை அமைந்துள்ளது. ஜெம்சூல் என்ற அந்த ரசாயன தொழிற்சாலையில் மசகு எண்ணெய், கிரீஸ் (பசை) பொருட்கள் மற்றும் பிற ரசாயன திரவங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் கிரீஸ் (பசை) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இதுவாகும்.

இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று முன்தினம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் தொழிற்சாலைக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்குள் சிக்கி இருந்த 70 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தொழிற்சாலையில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால், தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

மேலும், தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சிப்பதால் ரசாயனமும் தண்ணீரும் சேர்ந்து காற்று மாசை ஏற்படுத்தலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதால் தீயை அணைப்பு நடவடிக்கையில் தண்ணீர் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால், ரசாயன தொழிற்சாலையில் பற்றிய தீயை பிற வழிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்றுள்ளது. தொழிற்சாலையில் பற்றி எரிந்து வரும் தீ இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற திட்டமிட்டுள்ளனர்.

Next Story