அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ரூ.20,000 கோடி நன்கொடை


அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ரூ.20,000 கோடி நன்கொடை
x
தினத்தந்தி 16 Jun 2021 11:33 PM GMT (Updated: 16 Jun 2021 11:33 PM GMT)

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட்.

இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் மூலம் மெக்கன்சி ஸ்காட் உலகின் பெரும் பணக்கார பெண்களில் ஒருவராக மாறினார். மெக்கன்சியின் தற்போதைய சொத்து மதிப்பு 59.5 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் கோடி) உள்ளது. இதன் மூலம் அவர் உலகின் 22-வது பணக்காரராகவும், உலக அளவில் பெண்களில் 3-வது பணக்காரராகவும் விளங்குகிறார். அதே வேளையில் மெக்கன்சி ஸ்காட் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதில் வள்ளலாக திகழ்கிறார். ஏற்கனவே அவர் கடந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அறைக்கட்டளைகளுக்கு 5 பில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36 ஆயிரத்து 665 கோடி) அதிகமாக நன்கொடை வழங்கினார். இந்த நிலையில் தற்போது அவர் மேலும் 2.7 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 19 ஆயிரத்து 789 கோடியே 92 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத மக்களுக்கு இந்த பணத்தை அளிப்பதாகவும், இந்தப் பணத்தைப் பயன்படுத்த இன சமத்துவம், கலை மற்றும் கல்வி ஆகியவற்றில் பணிபுரியும் 286 அறக்கட்டளைகளை தேர்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story