இலங்கையில் இந்திய தூதருடன் தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகள் சந்திப்பு


இலங்கையில் இந்திய தூதருடன் தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 11:50 PM GMT (Updated: 17 Jun 2021 11:50 PM GMT)

1987-ல் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக 13-வது சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

நாட்டின் 9 மாகாணங்களை ஆள்வதற்கு ஏதுவான வகையில் மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரங்களை வழங்கும் இந்த 13-வது சட்ட திருத்தம், தமிழர் பிரச்சினை குறித்து பேசும் ஒரே அரசமைப்பு சட்டப் பிரிவாக இருந்து வருகிறது. ஆனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய விரும்புகிறார். அதே சமயம் ‌ இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி 13-வது சட்ட திருத்தம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையே முதல் முறையாக நேற்று முன்தினம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.‌ இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள் நேற்று தலைநகர் கொழும்புவில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுபான்மை தமிழ் சமூகத்துக்கான அதிகார பகிர்வு குறித்தும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வளர்ச்சி குறித்தும் 5 பேரை கொண்ட பிரதிநிதிகள் குழு தூதர் கோபால் பாக்லேவுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது ஒன்றுபட்ட இலங்கையின் கட்டமைப்பு மற்றும் 13-வது சட்ட திருத்தத்துக்கு இணங்க சமத்துவம் நீதி அமைதி மற்றும் கவுரவம் ஆகியவற்றுக்கான தமிழ் சமூகத்தின் விருப்பங்களை நிவர்த்தி செய்யும் நல்லிணக்கத்திற்கான இந்தியாவின் நீண்ட கால ஆதரவை தூதர் கோபால் பாக்லே வலியுறுத்தினார்.

Next Story