2025-ம் ஆண்டிற்குள் அடுத்த ரோவர் வாகனம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு அனுப்பப்படும்; துபாய் விண்வெளி மையம்


2025-ம் ஆண்டிற்குள் அடுத்த ரோவர் வாகனம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு அனுப்பப்படும்; துபாய் விண்வெளி மையம்
x
தினத்தந்தி 18 Jun 2021 12:07 AM GMT (Updated: 18 Jun 2021 12:07 AM GMT)

வருகிற 2025-ம் ஆண்டிற்குள் அடுத்த ரோவர் வாகனம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு அனுப்பப்படும் என முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் பொது இயக்குனர் சலெம் அல் மர்ரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த ராஷித் ரோவர் வாகனம்
ரஷிய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் கடந்த 14-ந் தேதி முதல் உலக விண்வெளி கருத்தரங்கம் நடந்து வருகிறது. இதில் அமீரகமும் தனது பங்களிப்பை தந்துள்ளது. ரஷிய விண்வெளி மையம் ராஸ்கோமாஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கில் அமீரகத்தின் சார்பில் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் பொது இயக்குனர் சலெம் அல் மர்ரி கலந்து கொண்டுள்ளார்.கருத்தரங்கில் அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். குறிப்பாக வரும் ஆண்டில் நிலவு பயண திட்டத்தின் கீழ் அமீரகத்தின் சார்பில் ராஷித் என்ற பெயரில் ரோவர் வாகனமானது ஜப்பான் நாட்டின் ஹக்குட்டோ என்ற லேண்டரில் வைத்து அனுப்பப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வருகிற 2024 அல்லது 2025-ம் ஆண்டிற்குள் அடுத்த ரோவர் வாகனம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு அனுப்பப்படும் என அறிவித்துள்ளார். எனவே நிலவு ஆராய்ச்சி திட்டமானது ஒரு நீண்ட கால திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி
அதற்கு அடுத்த கட்டமாக விண்வெளி ஆராய்ச்சிக்கும் நிலவு வழியாக செவ்வாய் கிரகத்திற்கு செல்ல அமீரக விண்வெளி வீரர்கள் தயார் செய்யப்பட உள்ளனர். துபாயில் தயாராகும் ராஷித் ரோவர் வாகனம் ஜப்பான் நாட்டில் உருவாகி வரும் ஹக்குட்டோ லேண்டரில் வைத்து அனுப்பப்படும். இந்த லேண்டர் மற்றும் ரோவர் வாகனம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வரும் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story