ஈரான் அதிபர் தேர்தலில் ஓட்டுப்பதிவு; வெற்றி பெறப்போவது யார்?


ஈரான் அதிபர் தேர்தலில் ஓட்டுப்பதிவு; வெற்றி பெறப்போவது யார்?
x
தினத்தந்தி 18 Jun 2021 10:37 PM GMT (Updated: 18 Jun 2021 10:37 PM GMT)

ஈரான் நாட்டில் அதிபர் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மதத்தலைவர் கமேனியின் ஆதரவாளர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஈரான் அதிபர் தேர்தல்
ஈரானில் நாட்டின் 13-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு நேற்று அங்கு தேர்தல் நடந்தது. அங்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அந்த நாட்டின் அரசியல் சாசனப்படி, அமெரிக்காவைப் போன்றே ஒருவர் 
தொடர்ந்து 2 முறை அதிபர் பதவி வகித்து விட்டால், அவர் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் நிற்க முடியாது.எனவே தற்போதைய அதிபரான மிதவாதி ஹசன் ரூஹானி மீண்டும் போட்டியிடவில்லை.இந்த தேர்தலில் 4 பேர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.அவர்கள், அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி, ஈரான் மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அப்துல் நாசர் ஹெம்மாட்டி, முன்னாள் ராணுவ தளபதி முகசன் ரஜாய் மற்றும் அமீர் உசேன் காஜிஜடே ஹசேமி எம்.பி ஆவார்கள்.இந்த தேர்தலில் 5 கோடியே 93 லட்சத்து 10 ஆயிரத்து 307 பேர் வாக்காளர்கள். இவர்களில் 35 லட்சம் பேர் வெளிநாடுகளில் உள்ளனர். இவர்களுக்காக 133 நாடுகளில் 234 வாக்குப்பெட்டிகளை வைத்து ஓட்டுபோட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஓட்டு போட்டார் மதத்தலைவர்
நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஈரான் உச்சத்தலைவராக கருதப்படுகிற மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, டெக்ரானில் அமைக்கப்பட்டிருந்த 110-வது எண் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.அதைத் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், “ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படும். வாக்காளர்கள் அனைவரும் திரண்டு வந்து உங்கள் அதிபரை தேர்ந்தெடுங்கள். நீங்கள் போடக்கூடிய ஓட்டு உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது” என்று குறிப்பிட்டார்.பல வேட்பாளர்கள் களத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சில அதிருப்தியாளர்களும், சீர்திருத்தவாதிகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையிலும் காலையில் ஓட்டுப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் பல வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுபோட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ெவற்றி யாருக்கு?
அதிபர் தேர்தலில் 4 பேர் போட்டியில் இருந்தாலும், மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆதரவைப் பெற்றிருப்பவர் இப்ராகிம் ரைசிதான். அவருக்கு வலுவான போட்டி இல்லை. எனவே அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் 
கணிசமாக உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அப்துல் நாசர் ஹெம்மாட்டி முக்கிய வேட்பாளராக, மிதவாதியாக களத்தில் நின்றாலும், அவர் தற்போதைய அதிபர் ஹசன் ரூஹானி போன்று மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்த வில்லை என்று கூறப்படுகிறது.ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி, பெரும் பொருளாதார தடைகளை விதித்திருப்பதால் ஈரான் நெருக்கடியில் உள்ளது. பொருளாதார கஷ்டங்கள் ஈரான் மக்கள் மனங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தருணத்தில் இப்ராகிம் ரைசி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அதிபர் பதவியை ஏற்பதற்கு முன்பாகவே அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட முதல் தலைவர் என்ற பெயரைப் பெறுவார். 1988-ம் ஆண்டு அரசியல் கைதிகளுக்கு பெருமளவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதில் அவருக்கு முக்கிய பங்கு இருந்ததால், அமெரிக்கா அவருக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது. அவர் தலைமை நீதிபதியாக உள்ள ஈரான் நீதித்துறைக்கு எதிராக சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இவர் தன்னை ஊழலுக்கு எதிராக போராடுகிற நபராக காட்டி வருகிறார். ஈரானின் பொருளாதார பிரச்சினைகளை எதிர்த்து போராட தான் ஒரு சிறந்த நபர் என கூறி இருக்கிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியதிருக்கிறது என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Next Story