ஹோண்டுராஸ் நாட்டில் சிறையில் பயங்கர கலவரம்; துப்பாக்கிச்சூடு


ஹோண்டுராஸ் நாட்டில் சிறையில் பயங்கர கலவரம்; துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 18 Jun 2021 10:59 PM GMT (Updated: 18 Jun 2021 10:59 PM GMT)

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டில் மொரோசொலி என்ற இடத்தில் ஒரு சிறை உள்ளது. இந்த சிறையில் எம்.எஸ்.13, பாரியோ 18 என்று அழைக்கப்படுகிற இரு ரவடி கும்பல்கள் உள்பட ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் உண்டு. அதற்கு மத்தியில் இந்த சிறையில் நேற்றுமுன்தினம் பெரும் கலவரம் மூண்டது. ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் இந்த சண்டை நீடித்தது.இதன் முடிவில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். சிறைக்குள் துப்பாக்கிச்சூடு நடந்த வீடியோக்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன. சிறைக்குள் கையெறி குண்டு வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவ்வளவு நடந்தும் சிறை நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அங்குள்ள எஸ்குவேலா ஆஸ்பத்திரியில் 15 கைதிகளும், ஒரு சிறைக்காவலரும் குண்டு பாய்ந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் செய்தி தொடர்பாளர் ஜூலியட் சவாரியா தெரிவித்தார்.

பாதுகாப்பு ஆய்வாளர் ராவுல் பினடா ஆல்வரடோ கூறுகையில், “சிறைக்காவலர்கள் ஊழல்வாதிகள். நாட்டின் உண்மையான சிறைக்கொள்கை இல்லை. சிறை வன்முறைகளை தடுக்க ஹோண்டுராஸ் போராடுகிறது” என தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “சிறைச்சாலைகள் கட்டி எழுப்பப்படுகின்றன. ஆனால் மறுவாழ்வு அமைப்பு கிடையாது. சிறைவாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சிறைகளை நடத்துகிறவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளனர்” என குறிப்பிட்டார்.இந்த கலவரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story