சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அபுதாபி, துபாய், ஓமனில் யோகா நிகழ்ச்சி


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அபுதாபி, துபாய், ஓமனில் யோகா நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 Jun 2021 11:44 PM GMT (Updated: 19 Jun 2021 11:44 PM GMT)

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அபுதாபி, துபாய் மற்றும் ஓமனில் நடந்த யோகா நிகழ்ச்சியில் இந்திய தூதர்கள் பங்கேற்றனர்.

யோகா தினம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையையடுத்து ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2015-ம் 
ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கபட்டு வருகிறது.

அபுதாபி-துபாய்
அபுதாபியில் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பவன் கபூர் தலைமை வகித்தார். அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் முபாரக் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். பொதுமக்கள் காணொலி வழியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதேபோல், துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் சார்பில் 7-வது சர்வதேச யோகா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு நிகழ்ச்சியானது துபாய் ஊத் மேத்தா சாலையில் அமைந்துள்ள இஸ்மாயிலி மையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் புரி தலைமை வகித்தார். ‘ஆரோக்கியத்திற்கான யோகா’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது

தொடர்ந்து இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் புரி கூறியதாவது:-

யோகா என்பது எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை. யோகாவானது அனைவருக்குமானது. இது நல்வாழ்வின் அறிவியல் ஆகும். மேலும் இது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் அறிவியலாகவும், நமது முழு திறனை உணர்ந்து கொள்ளும் அறிவியலாகவும் இருந்து வருகிறது. யுனெஸ்கோ அமைப்பானது இதனை மனிதகுலத்தின் பாரம்பரிய கலாசாரமாக கருதி வருகிறது. யோகா செய்வதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. இயற்கையான வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுதல், சுவாசக் கோளாறுகள், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகளையும் குறைக்க உதவுகிறது. தற்போதைய கொரோனா பாதிப்பு சூழலில் உடல் நலம் மற்றும் மனநலத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்றுனர்கள் ரங்கநாதன் சுப்பிரமணி, ஸ்ரீதரன் சமா உள்ளிட்டோர் பயிற்சிகளை வழங்கினர். இதில் இந்திய துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...
இதேபோல் ஓமனில் மஸ்கட் இந்திய தூதரகத்தில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் முனு மகவர் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-

யோகா தினத்தை முன்னிட்டு ஓமன் நாட்டின் மஸ்கட், சலாலா, நிஸ்வா, சுகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் காணொலி வழியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க யோகா உதவியாக இருந்து வருகிறது.சர்வதேச யோகா தினத்தை ஓமன் நாட்டில் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் பின் சேட் தனது ஆதரவை வழங்கி வருகிறார். அதற்காக இந்திய அரசின் சார்பிலும், மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியானது காணொலி வழியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Next Story