இஸ்ரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஐக்கிய அரபு அமீரகம் பயணம்


Image courtesy : AFP
x
Image courtesy : AFP
தினத்தந்தி 21 Jun 2021 5:18 PM GMT (Updated: 21 Jun 2021 5:24 PM GMT)

இஸ்ரேலிய வெளியுறவுத்துறை மந்திரி யெய்ர் லாப்பிட் 2 நாள் பயணமாக வரும் 29-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

ஜெருசலேம்,

இஸ்ரேலில் 12 ஆண்டுகால நெதன்யாகுவின் ஆட்சி முடிவடைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் இந்த ஆட்சி அமைந்துள்ளது. 

இதில் யாமினா கட்சி தலைவரான நப்தலி பென்னெட் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெறுப்பேற்றுள்ளார். யெய்ர் லாப்பிட் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.

வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள யெய்ர் லாப்பிட் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வரும் 29-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் யெய்ர் லாப்பிட் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். 

இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் காசா இடையே சமீபநாட்களாக தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி யெய்ர் லாப்பிட்டின் ஐக்கிய அமீரக பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

இந்த பயணத்தின் போது அபுதாபி மற்றும் துபாயில் இஸ்ரேலிய தூதரகத்தை திறந்து வைக்கிறார். 2020 ஆம் ஆண்டு இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக இஸ்ரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஐக்கிய அரபு அமீரகம் செல்வதால் யெய்ர் லாப்பிட்டின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.  

Next Story