எத்தியோப்பியாவில் உள்நாட்டு சண்டை; வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 51 பேர் கொன்று குவிப்பு


எத்தியோப்பியாவில் உள்நாட்டு சண்டை; வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 51 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2021 2:55 PM GMT (Updated: 24 Jun 2021 2:55 PM GMT)

எத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சண்டை

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒரு போராளி அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பில் இருப்பவர்கள் துணை ராணுவப்படையில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்கள். ஏறத்தாழ 2.5 லட்சம் பேர் இதில் உள்ளனர். தற்போதைய பிரதமர் அபி அகமது ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பாக இந்த அமைப்பினர் அங்கு வலுவுள்ள அரசியல் சக்தியாக விளங்கியதோடு மட்டுமின்றி, பல்வேறு சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தனர். இந்த அமைப்புக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்குவதற்கு அந்த நாட்டின் பிரதமர் அபி அகமது உத்தரவின்பேரில் ராணுவம் நடத்துகிற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. சமீப காலமாக டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னேறி வருகின்றனர். இதை எத்தியோப்பிய அரசு நிராகரித்து வந்தது. கடந்த 8 மாதங்களாக நடந்து வருகிற உள்நாட்டு சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

வான்தாக்குதல்

இந்தநிலையில் 22-ந் தேதியன்று பிற்பகலில் வடக்கு டைக்ரே பகுதியில் உள்ள டோகோகா நகர சந்தை மீது உள்நாட்டு படையினர் கடுமையான வான் தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு மழையில் சிக்கிய அப்பாவி மக்கள் அலறினர். பலரும் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர். இருப்பினும் இந்த வான்தாக்குதலில் 51 பேர் பலியாகி உள்ளதாகவும், 33 பேர் காணாமல் போய் உள்ளதாகவும், முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு, ஆஸ்பத்திரிகளில் சேர்ப்பதில் செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு உதவிக்கரம் நீட்டியது. படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 2 வயது குழந்தை உள்ளிட்ட படுகாயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மெக்கெல் நகரில் உள்ள எய்டர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.

தடை செய்த ராணுவம்

சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து உதவ முயன்றபோது எத்தியோப்பிய ராணுவம் தங்களை தடுத்து விட்டதாக மருத்துவ பணியாளர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். அதே நேரத்தில் போராளிகளை குறி வைத்துத்தான் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக எத்தியோப்பிய ராணுவம் தெரிவித்தது. எனினும் இந்த தாக்குதல் குறித்து எத்தியோப்பியா விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்கா கண்டனம்

எத்தியோப்பிய ராணுவம் நடத்தியுள்ள வான்தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதபற்றி அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:-

டைக்ரே மாகாணத்தில் உள்ள சந்தை மீது நடத்திய குண்டு வீச்சில் டஜன் கணக்கிலானவர்கள் பலியாகி இருப்பதாகவும், படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது. எத்தியோப்பிய ராணுவம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விடாமல் மருத்துவ பணியாளர்களை தடுத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது. நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை மறுப்பது என்பது மிகவும் கொடூரமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான மற்றும் தடையற்ற மருத்துவ சிகிச்சை அளிப்பதை எத்தியோப்பிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story