சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல்


சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல்
x
தினத்தந்தி 28 Jun 2021 9:58 PM GMT (Updated: 28 Jun 2021 9:58 PM GMT)

சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாக்தாத்,

ஈரான் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல், ஐ.எஸ்., அல்கொய்தா பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 

அமெரிக்க படையினர் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் தங்கள் படைத்தளங்களை அமைத்து அங்கிருந்தவாறு ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் பதுங்கி செயல்பட்டு வரும் ஈராக் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. 

ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், ஈராக்-சிரியா நாட்டு எல்லையில் பதுங்கி உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் மீது அமெரிக்கா நேற்று அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வான்வெளி தாக்குதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்டதாகும்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் ஈராக்-சிரியா எல்லையில் நடத்தப்பட்ட 2-வது தாக்குதல் இதுவாகும்.

இந்நிலையில், சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் இன்று பதிலடி தாக்குதல் நடத்தினர். அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதல் நடைபெற்ற சில மணி நேரங்களில் இந்த பதிலடி தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டெய்ர் அல்-சோர் மாகாணத்தின் அல்- ஒமர் எண்ணெய் வயல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளம் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் 8 ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Next Story