மாடர்னா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தோனேசியா அனுமதி


மாடர்னா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தோனேசியா அனுமதி
x
தினத்தந்தி 2 July 2021 9:33 AM GMT (Updated: 2 July 2021 9:33 AM GMT)

மாடர்னா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தோனேசிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஜகார்ட்டா,

உலகின் 4-வது அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தோனேசியாவில், கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் 58,995 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் அங்கு 504 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை இந்தோனேசிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அங்குள்ள மொத்த மக்கள் தொகையான 27 கோடியில் 18 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தற்போது அங்கு தினசரி 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் மாதம் முதல் தினமும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்தோனேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது இந்தோனேசியாவில் அஸ்ட்ரா செனகா, சினோவேக், சினோஃபார்ம் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இதனை தொடர்ந்து தற்போது மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் வழங்கியுள்ளது. இதையடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ், இந்தோனேசியாவிற்கு 40 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story