ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள்


ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள்
x
தினத்தந்தி 2 July 2021 5:40 PM GMT (Updated: 2 July 2021 5:40 PM GMT)

ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க படைகள் வெளியேறின.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர்

உலகை உலுக்கிய அமெரிக்கவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியிலிருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி கொண்டுவரப்பட்டது.‌ ஆனாலும் அதே ஆண்டு தலீபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது.‌ இந்தப் போரில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக களம் இறங்கின. 20 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த உள்நாட்டு போரில் தலீபான்களின் தாக்குதலில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தரப்பில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்

இந்த சூழலில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது தலீபான்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு பிரதிபலனாக 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் முழுமையாகத் திரும்ப பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டது.‌

பக்ராம் விமானப்படை தளம்

ஆனால் அமெரிக்காவில் டிரம்புக்கு பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜோ பைடன் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப‌ பெறப்படும் என அறிவித்தார். அதன்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன.‌ இந்த நிலையில் தலீபான்களுக்கு எதிரான போரின் மையப்பகுதியாக விளங்கி வரும் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இறுதி கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.‌ தலைநகர் காபூலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பக்ராம் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய விமானப்படை தளம் ஆகும்.

10 ஆயிரம் அயல் நாட்டு வீரர்கள்

1980-களில் ஆப்கானிஸ்தானை சோவியத் ராணுவம் ஆக்கிரமித்தபோது இந்த விமானப்படைத்தளம் கட்டப்பட்டது. ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புக்கு பிறகு 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ராணுவத்துக்கு பக்ராம் விமானப் படை தளம் வழங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களை நிறுத்துமிடம், போர் மற்றும் மிகப்பெரிய சரக்கு விமானங்கள் தரையிறங்கும் வசதி கொண்ட 2 ஓடு தளங்கள், 50 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி என பல்வேறு வசதிகளை கொண்ட இந்த விமானப்படை தளத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அயல்நாட்டு வீரர்கள் தங்கியிருந்தனர்.

அமெரிக்கா தலைமையிலான படைகள் வெளியேறின

இதனால் தலீபான்களுக்கு எதிரான உள்நாட்டு போரில் இந்த விமானப்படைத்தளம் மிக முக்கியமான மையப்பகுதியாக இருந்து வந்தது.இதன் காரணமாக இந்த விமானப்படைத்தளம் பலமுறை தலீபான்களின் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளது. இந்த சூழலில் தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு பக்ராம் விமானப்படை தளத்தை விட்டு நேற்று முன்தினம் வெளியேறினர். முன்னதாக இந்த விமானப்படைத்தளம் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தலீபான் பயங்கரவாதிகள் வரவேற்றுள்ளனர்.


Next Story