உலக செய்திகள்

“உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது” - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை + "||" + We are in a dangerous period warns the World Health Organization

“உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது” - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

“உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது” - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஜெனீவா,

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

பொதுவாகவே வைரஸ் கிருமிகள் தங்கள் புறச்சூழலை பொறுத்து உருமாற்றம் அடையும் தன்மையை கொண்டவை ஆகும். அதில் சிலவகை உருமாற்றங்கள் அந்த கிருமியை பலமிழக்கச் செய்துவிடும். ஆனால் சில சமயங்களில் இந்த உருமாற்றமானது அந்த கிருமியின் வீரியத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துவிடும்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் கிருமியானது, அது கண்டறியப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. 

இதில் ஆல்பா வகை கொரோனா, முதல் முறையாக இங்கிலாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் இந்த வகை கொரோனா அதிகம் பரவியது. இதுவரை உலகம் முழுவதும் 172 நாடுகளில் ஆல்பா வகை கொரோனா பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல் பீட்டா வகை கொரோனா, முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. இது தென் ஆப்பிரிக்க நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த பீட்டா வகை கொரோனா தொற்று இதுவரை உலகம் முழுவதும் 120 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து காமா வகை கொரோனா, முதல் முறையாக பிரேசில் நாட்டில் உள்ள மானாஸ் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனாவால் பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததோடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணமாகவும் அமைந்தது. இந்த காமா வகை கொரோனா தொற்று இதுவரை உலகம் முழுவதும் 72 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்ததாக இந்தியாவில் மிக வேகமாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டது. இந்த டெல்டா வகை கொரோனா இதுவரை உலகம் முழுவதும் 96 நாடுகளில் பரவியுள்ளது. இது ஆல்பா வகை கொரோனாவை விட 55 சதவீதம் ஆதிக பரவும் தன்மையை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிகள், இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுகளுக்கு எதிராக எந்த அளவு எதிர்ப்பு திறனை கொண்டிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சில தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் இந்த உருமாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக உத்தரவாதம் அளிக்கின்றன. இருப்பினும் இது குறித்து ஆய்வு செய்ய அதிக தரவுகள் தேவை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கொரோனா வைரஸ் போல உருமாற்றம் அடைந்து வரும் நோய்க்கிருமிகளால், உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல என்றும் டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. தெலங்கானாவில் இன்று 465 பேருக்கு கொரோனா; 869 பேர் டிஸ்சார்ஜ்
தெலங்கானாவில் தற்போது 10,316 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அமீரகத்தில் புதிதாக 1,520 பேருக்கு கொரோனா
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.72 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.12 கோடியை தாண்டியது.
5. சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.