என்ஜின் செயலிழந்ததால் கடலுக்குள் பாய்ந்த அமெரிக்க சரக்கு விமானம்


என்ஜின் செயலிழந்ததால் கடலுக்குள் பாய்ந்த அமெரிக்க சரக்கு விமானம்
x
தினத்தந்தி 3 July 2021 5:29 PM GMT (Updated: 3 July 2021 5:29 PM GMT)

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹொனலுலுவில் இருந்து மவு தீவுக்கு போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டது. அந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர். ஹொனலுலுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜின் திடீரென செயலிழந்தது.

இதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் ஹொனலுலு விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர்.இதுகுறித்து அவர்கள் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விட்டு விமானத்தை திருப்பினர்.ஆனால் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சற்றும் எதிர்பாராத வகையில் கடலுக்குள் 
பாய்ந்தது. விமானம் கடலில் விழுந்ததும் விமானிகள் இருவரும் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தில் இருந்து வெளியேறினர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அமெரிக்க கடலோர காவல் படையினர் மீட்பு படகுகளில் உடனடியாக ‌சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த விமானிகள் 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ஜின் செயலிழந்து விமானம் கடலுக்குள் பாய்ந்தபோதும் விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story