பள்ளிப்படிப்பில் அதிக மதிப்பெண் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 10 ஆண்டுக்கான `கோல்டன் விசா’: அமீரக அரசு


பள்ளிப்படிப்பில் அதிக மதிப்பெண் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 10 ஆண்டுக்கான `கோல்டன் விசா’: அமீரக அரசு
x
தினத்தந்தி 5 July 2021 6:46 PM GMT (Updated: 5 July 2021 6:46 PM GMT)

பள்ளிப்படிப்பில் அதிக மதிப்பெண் பெறும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 10 ஆண்டுக்கான `கோல்டன் விசா’ வழங்கப்படும் என்று அமீரக அரசு அறிவித்துள்ளது.

அமீரகத்தில் கடந்த 2019-வது ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்களின்படி வெளிநாட்டு மக்களை கவரும் விதத்தில் நீண்ட நாட்களுக்கான கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.

10 ஆண்டுக்கான விசா
இந்த விசாவானது 5 மற்றும் 10 ஆண்டுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண விசாவானது 2 ஆண்டுக்கு மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், அறிவியல் துறையில் நிபுணர்கள் மற்றும் குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் என வரையறுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதனை பெற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே கோல்டன் விசாவானது சாதாரண குடியிருப்பு விசாவுக்கு பதில் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கூட மாணவர்களுக்கு
இதுவரை அமீரகத்தில் விசா பெற்று படித்து வரும் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது அமீரக விசாவில் வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்கள் ஆகியோர் சராசரியாக தரவரிசையில் 3.75 புள்ளிகள் பெற்று இருந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதில் தற்போது கோல்டன் விசாவில் மேலும் கூடுதல் சலுகையாக பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பு
இது குறித்த அறிவிப்பு நேற்று (திங்கட்கிழமை) அமீரக அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமீரகத்தில் வசித்து வரும் சிறந்த வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும், திறமையானவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் அமீரக அரசானது கோல்டன் விசாவை பள்ளிக்கூட மாணவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது. அமீரகத்தின் வளர்ச்சியில் திறமையாளர்களின் பங்களிப்பை நிரந்தரமாக பெறும் முயற்சியாக இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் அமீரகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.

95 சதவீதம்....
அமீரகத்தில் படிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த திறமையான வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.இதில் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினர் (முதன்மை உறுப்பினர்கள்) அனைவருக்கும் 10 ஆண்டுக்கான கோல்டன் விசா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் 
இறுதித்தேர்வில் 95 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் இந்த கோல்டன் விசா பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.மாணவர்களுக்கான இந்த விசாவிற்கு அமீரக அரசு பள்ளிக்கூடங்கள் ஸ்தாபன அமைப்பின் (எமிரேட்ஸ் ஸ்கூல்ஸ் எஸ்டாபிலிஷ்மென்ட்) மூலமாக விண்ணப்பிக்க வசதி செய்துதரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் வரவேற்பு...
இந்த அறிவிப்பிற்கு அமீரகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது பெற்றோர்களுக்கும் நீண்ட நாட்கள் அமீரகத்தில் வசிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளுக்கு விசா அளிப்பவர்களாக இருந்த நிலைமை மாறி இனிமேல் குழந்தைகளே தங்கள் பெற்றோருக்கு விசா 
அளிப்பவர்களாக மாறும் காலம் வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர், பெற்றோர்கள் செய்யும் வேலைதான் மாணவர்களை தங்க வைத்து படிக்க வைத்துள்ளது. எனவே இதில் நீண்ட காலம் வசிப்பது குறித்த தாக்கம் எப்படி இருக்கும் என அறிவது கடினம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story