கொரோனா வைரஸ் அச்சம்; இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா


கொரோனா வைரஸ் அச்சம்; இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா
x
தினத்தந்தி 8 July 2021 1:20 AM GMT (Updated: 8 July 2021 1:20 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு இந்த கொடிய வைரஸ் 3 கோடியே 46 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் 6 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது.எனினும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது.ஜனவரிக்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க அரசு கூறுகிறது.இதனிடையே நாட்டில் மீண்டும் வைரஸ் 
பரவல் ஏற்படாமல் இருக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இலங்கைக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்
அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள இலங்கை, பூட்டான் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நீங்கள் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டால், கொரோனா வைரஸ் நோய்க்கு ஆளாவது மற்றும் கடுமையான அறிகுறிகளை உருவாக்குவதற்கான ஆபத்து குறைவாக இருக்கும். இருந்தபோதிலும் நீங்கள் எந்த ஒரு சர்வதேச பயணத்தையும் திட்டமிடுவதற்கு முன்பு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்வது அவசியம்.

அதிக ஆபத்துள்ள 8 நாடுகள்
அந்த வகையில் தற்போது இலங்கை, பூட்டான், போட்ஸ்வானா, காங்கோ குடியரசு, மலாவி, ருவாண்டா, சியரா லியோன் மற்றும் தென்னாப்பிரிக்கா 8 நாடுகள் கொரோனா பாதிப்பில் அதிக ஆபத்துள்ள நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.மேற்கூறிய இந்த நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொண்டால் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.எனவே மேற்கூறிய 8 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

16 கோடி பேருக்கு தடுப்பூசி
இதனிடையே அமெரிக்காவில் 16 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இலக்கு இந்த வாரத்துக்குள் எட்டப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த கொடிய வைரசிலிருந்து சுதந்திரத்தை அறிவிக்கும் தருணத்துக்கு நாடு மிக நெருக்கமாக உள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

Next Story