ஹைதி அதிபர் படுகொலையில் தொடர்புடைய 4 பேர் சுட்டுக்கொலை - காவல்துறை தகவல்


ஹைதி அதிபர் படுகொலையில் தொடர்புடைய 4 பேர் சுட்டுக்கொலை - காவல்துறை தகவல்
x
தினத்தந்தி 8 July 2021 4:39 PM GMT (Updated: 8 July 2021 4:39 PM GMT)

ஹைதி அதிபரை படுகொலை செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

போர்ட்டொ பிரின்ஸ்,

கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்று போர்ட்டொ பிரின்ஸ் நகரில் உள்ள அவரது தனியார் குடியிருப்பு வளாகத்திற்குள் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி மார்ட்டின் மாய்சே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் கூறுகையில், இதை, ‘மனித தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்’ என குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தவும் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் அதிபரை படுகொலை செய்த கும்பலை தேடி வந்த ஹைதி போலீசார் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து சுற்றி வளைத்த போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த சண்டையில் 4 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் 3 போலீஸ்காரர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாகவும், பின்னர் அவர்களிடம் இருந்து 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ஹைதி காவல்துறை தெரிவித்துள்ளது. 

Next Story