ஹைதி நாட்டின் அதிபர் சுட்டு படுகொலை: ஓமன் அரசு கண்டனம்


ஹைதி நாட்டின் அதிபர் சுட்டு படுகொலை: ஓமன் அரசு கண்டனம்
x
தினத்தந்தி 10 July 2021 1:58 AM GMT (Updated: 10 July 2021 1:58 AM GMT)

கரீபியன் கடல்பகுதியில் உள்ள தீவு நாடு ஹைதி. இந்த நாட்டின் அதிபர் ஜோவெனல் மாய்சே அங்குள்ள போர்ட்டா பிரின்ஸ் நகரில் தனி வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில், கடந்த 6-ந் தேதி ஆயுதங்களோடு அவரது வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை சுட்டுக் படுகொலை செய்தது. இதனை அடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதிபர் கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு வெளிநாட்டவர்கள் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. கொலம்பியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 26 பேர் மற்றும் 2 அமெரிக்கர்கள் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படுகொலை தொடர்பாக இதுவரை 17 பேரை கைது செய்துள்ள போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இதற்கு ஓமன் அரசு வெளியுறவுத்துறை சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று அந்த துறை வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘‘நட்பு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மாய்சே சுட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது இரக்கம் இல்லாத செயல். இதனை ஓமன் அரசு வன்மையாக கண்டிக்கிறது. அந்நாட்டின் அதிபர் மறைவுக்கு ஓமன் நாட்டின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story