படைகளை அனுப்பி உதவுமாறு ஐ.நா. மற்றும் அமெரிக்காவிடம் ஹைதி அரசு கோரிக்கை


படைகளை அனுப்பி உதவுமாறு ஐ.நா. மற்றும் அமெரிக்காவிடம் ஹைதி அரசு கோரிக்கை
x
தினத்தந்தி 10 July 2021 3:57 AM GMT (Updated: 10 July 2021 3:57 AM GMT)

நாட்டில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க படைகளை அனுப்பும்படி ஐ.நா. மற்றும் அமெரிக்காவிடம் ஹைதி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

போர்ட்டோ பிரான்ஸ்,

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (வயது 53) கடந்த 7-ம் தேதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின்போது அவரது மனைவி மார்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார். 

28 பேர் கொண்ட கமெண்டோ குழு அதிபர் ஜோவனல் மோயிஸை கொலை செய்துள்ளது. அந்த கமெண்டோ குழுவில் 26 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் ஆகும். 2 பேர் அமெரிக்கர்கள் ஆகும். அதிபரை கொலை செய்தவர்களில் 17 பேர் கொலம்பிய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

28 பேரில் இதுவரை 2 அமெரிக்கர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் ஹைதி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். எஞ்சிய 8 பேர் தப்பியோடிவிட்டதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அதிபர் கொலை செய்யப்பட்டதால் ஹைதியின் இடைக்கால பிரதமராக செயல்பட்டு வந்த ஹிலோடி ஜோசப் நாட்டின் போலீஸ் மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டை தனக்கு கீழ் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தார். 

ஆனால், அதிபர் ஜோவனல் மோயிஸ் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏரியல் ஹென்ரி என்பவரை ஹைதி நாட்டின் புதிய பிரதமராக அறிவித்தார். ஏரியல் ஹென்ரி இந்த வாரம் புதிய பிரதமராக பதவியேற்கவிருந்த நிலையில் அதிபர் கொல்லப்பட்டதால் அதிகாரம் யார் கையில் உள்ளது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இடைக்கால பிரதமராக உள்ள ஹிலோடி ஜோசப்பிற்கும், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டு பதவியேற்கவிருந்த ஏரியல் ஹென்ரிக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரதமர் பதவி தங்களுக்கானது என உரிமை கோருவதால் ஹைதி நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு மக்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே போராட்டங்களும், வன்முறையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிபர் கொல்லப்பட்டதால் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியிலான குழப்பம் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை கட்டுப்படுத்த படைகளை அனுப்பும் படை ஐ.நா. அமைப்பு மற்றும் அமெரிக்காவிடம் ஹைதி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஹைதி பிரதமர் அலுவலகம் கடந்த 7-ம் தேதி ஐ.நா. அமைப்பு மற்றும் அமெரிக்காவுக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த படைகளை அனுப்பி உதவும்படி ஐ.நா. மற்றும் அமெரிக்காவுக்கு ஹைதி அரசு கடிதம் எழுதியுள்ளது. படைகளை அனுப்பும்படி ஹைதி அரசு விடுத்துள்ள கோரிக்கையை நிராகரித்துள்ள அமெரிக்கா தற்போதைய சூழ்நிலையில் படைகளை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது. ஆனால், அதிபர் கொலை தொடர்பாக விசாரணைக்கு எஃப்பிஐ (தேசிய புலனாய்வு அமைப்பு) மற்றும் உள்துறை அமைச்சகம் அதிகாரிகளை ஹைதி நாட்டிற்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

அதேபோல், ஐ.நா. அமைதிப்படையை ஹைதி நாட்டிற்கு அனுப்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளில் சம்பதம் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story