தென்சீன கடலில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும்: அமெரிக்கா எச்சரிக்கை


தென்சீன கடலில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும்: அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 July 2021 12:49 AM GMT (Updated: 13 July 2021 12:49 AM GMT)

தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. மேலும் தென் சீன கடல் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தென்சீனக்கடலில் கடல்சார் உரிமைகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கொள்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தென்சீனக்கடல் விவகாரத்தில் முந்தைய நிர்வாகத்தின் கொள்கையை தொடர்வதாக அறிவித்துள்ளது. மேலும் தென் சீன கடலில் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் ‘‘தென்கிழக்கு ஆசிய கடலோர நாடுளை கட்டாயப்படுத்தி அச்சுறுத்தும் சீனா, தென்சீனக்கடலில் கடல் ஒழுங்குக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சீன அரசு சர்வதேச சட்டத்தின் கீழ் அதன் கடமைகளுக்கு கட்டுப்பட வேண்டும். அதன் ஆத்திரமூட்டும் நடத்தையை நிறுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தின் உரிமைகளை மதிக்கும் விதிகளை அடிப்படையாக கொண்ட கடல் ஒழுங்குக்கு அது உறுதி பூண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினார்.

Next Story