பாகிஸ்தானில் சீன தொழிலாளர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் - சீன வெளியுறவுத்துறை கண்டனம்


பாகிஸ்தானில் சீன தொழிலாளர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் - சீன வெளியுறவுத்துறை கண்டனம்
x
தினத்தந்தி 15 July 2021 12:01 AM GMT (Updated: 15 July 2021 12:01 AM GMT)

பாகிஸ்தானில் சீன நாட்டினர், அமைப்புகள் மற்றும் திட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சீனா பல பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கி உள்ளது. ஆனால் சீன நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களை பிரிவினைவாத குழுக்கள் எதிர்த்து வருகின்றன. சீனா உதவியுடன் நடைபெறும் திட்டங்களால் உள்ளூர்வாசிகளுக்கு குறைந்த அளவே பலன் கிடைப்பதாகவும், பெரும்பாலான வேலைகள் வெளியாட்களுக்குச் செல்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

அந்த வகையில் வடகிழக்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணம் கொகிஸ்தான் பகுதியில் தாசு நீர் மின் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெர்சீம் முகாமில் இருந்து நேற்று காலை ஒரு பஸ்சில் சீன என்ஜினீயர்கள் , சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் 30 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். 

அப்போது அந்த பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பேருந்து தீப்பிடித்ததுடன், பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 9 சீன தொழிலாளர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த  தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த தாக்குதலுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானில் சீன நாட்டினர், அமைப்புகள் மற்றும் திட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

Next Story